தஞ்சையில் கால்வாயில் கவிழ்ந்த கார்.. கூகுள் மேப் காரணமா? - தஞ்சை செய்திகள்
Published : Jan 8, 2024, 3:25 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரை சுற்றிலும் நவகிரக ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், புராதனமிக்க சைவ கோயில்கள் என எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளதால், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்களில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கோயில்களுக்கு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலாவிற்கு ஹோண்டா ஐ10 வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஜான் செல்வராஜ் நகரில் தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளதால், அங்கு செல்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்து கொண்டிருந்ததால், மோதிலால் தெரு வழியாக சென்று கற்பக விநாயகர் கோயில் முன்புறம் உள்ள சிறிய சந்து வழியாக ஜான் செல்வராஜ் நகருக்கு செல்லும் பாதைக்கு பதிலாக, தவறுதலாக முதல் சந்திலேயே காரைத் திருப்பியுள்ளனர்.
அந்த சாலை முடிவில் வழி என்பதற்கு எந்த எச்சரிக்கை பலகையும் இல்லாததால், மழை இருட்டில் சரியாக பார்க்க முடியாததாலும் எதிர்பாராத விதமாக கார் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. மேலும் இந்த விபத்து குறித்தும், இந்த கார் யாருக்கு சொந்தமானது, எத்தனை பேர் பயணம் செய்தனர் என கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.