நான் ஏன் இந்தி பேச வேண்டும்? - கொந்தளித்த ஆட்டோ டிரைவர்! - கர்நாடகா செய்திகள்
கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் பெண்கள் சிலர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது பயணம் செய்த பெண், ஆட்டோ ஓட்டுநரை இந்தி மொழியில் பேசுமாறு கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், ‘என்னுடைய உள்ளூர் மொழி (கன்னடம்) இருக்கும்போது நான் ஏன் இந்தி மொழியில் பேச வேண்டும்?’ என கேட்கிறார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண், “எங்களுக்கு கன்னட மொழி தெரியாது” என பதில் அளிக்கிறார். இதனையடுத்து பேசும் ஆட்டோ ஓட்டுநர், “இது கர்நாடகா. இது எனது மண். நீங்கள் கட்டாயமாக கன்னடம் பேச வேண்டும். நான் ஏன் இந்தி பேச வேண்டும்?” என மீண்டும் கேள்வி எழுப்புகிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பெண், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிச் செல்கிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த வீடியோ எப்போது எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது குறித்தான தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.