ஆடி அமாவாசை: புதுபூண்டிதாங்கல் காளியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் தரிசனம்! - aadi ammavasai
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் அமைந்து உள்ள 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் காளிசக்தி பீடம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ சங்கர் சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் இருந்து காளிபீடம் வரை 300க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு ஊற்றப்பட்டது.
முன்னதாக, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் தூள், மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், சந்தனம், விபூதி, பால், குங்குமம், திரவியப்பொடி, மஞ்சனை, பன்னீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அம்மனுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. பின்பு, வண்ண மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கஞ்சி கலயம் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் செவரப்பூண்டி மற்றும் கீழ்பென்னாத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.