பொதுக்கூட்டம் முடிந்த கையோடு....வாழைத்தாரை அள்ளிச்சென்ற தொண்டர்கள்! - kalaingar kottam
திருவாரூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, காட்டூரில் 7000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு நுழைவு வாயில் முன்பு வாழை மரத்தில் வாழைத்தார், இளநீர், நுங்கு, ஈச்சங்காய் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த கலைஞர் கோட்டத்தை செவ்வாய்க்கிழமை(ஜூன் 20) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார். மேலும் பொதுக்கூட்ட மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் 20ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் விழா முடிவுற்ற கையோடு வெளியே சென்ற பொதுமக்கள் வாழைத்தார், இளநீர், நுங்கு, ஈச்சங்காய் போன்றவற்றை எடுத்து சாக்கு மூட்டையிலும் வாகனத்திலும் தலையிலும் தூக்கி செல்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.