தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனை; கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் பங்கேற்பு! - சத்குரு தியாகராஜர்
Published : Aug 27, 2023, 10:52 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வளரும் இசைக் கலைஞர்கள் மன்றம் ஆண்டு தோறும் சத்குரு தியாகராஜரைப் போற்றும் வகையில், திருவையாறு தியாகபிரும்ப இசை விழாவினை நடத்தி வருகிறது. அந்த வகையில் 37வது ஆண்டாக நேற்றும் (ஆகஸ்ட் 26) இன்றும் (ஆகஸ்ட் 27) என இருநாட்களுக்கு இவ்விழா கும்பகோணம் சங்கர மடத்தில் நடைபெற்றது.
கும்பகோணத்தில் இன்று தொடர்ந்து 37வது ஆண்டாக வளரும் இசைக் கலைஞர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திருவையாறு தியாகப்பிரும்ப இசைவிழாவின் 2ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 27) முக்கியமான நிகழ்வாகக் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் தலைமையில், தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனை இசை நிகழ்வில் நூற்றுக்கணக்கான வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கலைஞர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வமாகக் கலந்து கொண்டு கண்ணாரக்கண்டும், காதாரக்கேட்டும் ரசித்தும் மகிழ்ந்தனர்.
மேலும், தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் வாசிக்கப்பட்டது, இந்நிகழ்வில் காமாட்சி மண்டலி, கோதை குழாம் மற்றும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாய்ப்பாட்டு மற்றும் இசை வாத்திய கலைஞர்கள் இணைந்து ஒருசேரப் பங்கேற்கச் சிறப்பாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.