கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் 6 அடி சிலையுடன் அமைதிப் பேரணி!! - coimbatore news
கோவை:மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது திருவுருவ சிலை மற்றும் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் சுமார் 6 அடி கலைஞர் சிலை, மற்றும் கலைஞரின் பதாகைகள் எந்தியபடி அமைதி பேரணி நடைபெற்றது.
நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக துவங்கிய பேரணி நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் அண்ணா சிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “அனைத்து கட்சியினரும் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுடைய மனதிலும் கலைஞர் இடம் பெற்றுள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு நிறைவேறுவதற்கு கலைஞர் காரணமாக இருந்து உள்ளார்.
கலைஞருடைய பெருமையை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்ப்பது எங்களது எண்ணம் இல்லை, கட்சி சார்பில் செய்யக்கூடியவையாக இருந்தாலும், அரசு சார்பாக இதை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல திட்டங்கள், நலத்திட்டங்கள் போய் சேர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். திமுகவினர் மனதில் உள்ள வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளதாக” தெரிவித்தார்.