தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவிய நீதிபதிகள்..! கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்! - உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம்
Published : Nov 9, 2023, 2:24 PM IST
கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி திட்டச் சிறப்பு முகாம் நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சேர்மன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, மூத்த தூய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்து, கையெடுத்துக் கும்பிட்டு நீதிபதி ஸ்ரீராம் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் பிரபு, நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆகியோரும் தூய்மை பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்தனர்.
தூய்மைப் பணி மேற்கொள்ள வந்த தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நீதிபதிகள் பாதபூஜை செய்த செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியைத் துவக்கி வைத்தனர். அதன் பின்பு தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.