தருமபுரி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த அதிகாரிகள்! - 16 revenue villages
தருமபுரி:தருமபுரி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் கேள்விக்குப் பதில் தெரியாமல் முழித்த அதிகாரிகள் திணறினர். தருமபுரி வட்டத்திற்கு உட்பட்ட 16 வருவாய் கிராமங்களில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நிலம் அளக்கப் பயன்படும் சங்கிலி அலுவலகம் முன்பு ஒவ்வொரு வருவாய் கிராமத்தின் சார்பிலும் அளவைகள் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி நில அளவையர்களை அழைத்து ’எவ்வாறு நிலங்களை அளப்பீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு இரண்டு நில அளவையாளர்கள் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக நில அளவையர் ஒருவரை அழைத்துக் கேட்டார்.
அவர் தனக்கு தெரிந்ததை மட்டும் சொல்லிவிட்டு அமைதி காத்தார். இது குறித்து அந்த அதிகாரிகளை நன்கு தெரிந்து கொண்டு செயல்படுமாறு எச்சரித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், நில அளவை தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக ஏ.கொல்லஅள்ளிப் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற மாற்றுத்திறனாளி முதியோர் உதவித்தொகை வேண்டும் என மனுக் கொடுத்தார். அம்மனுவை பெற்ற ஆட்சியர் உடனடியாக அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான முதியோர் உதவித் தொகையை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் பெருமளவில் வரவில்லை - வங்கி அதிகாரிகள்