புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு - 550 காளைகள் பிடிக்க 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு - ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மலைகோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த வருடம் சில காரணங்களால் தாமதமாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இருப்பினும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 550 காளைகளும் 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிகட்டு போட்டி 5 சுற்றுகளாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வருவதை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வந்தனர். இதனை பார்வையாளர்கள் ரசித்து வந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், பேன், மிக்ஸி குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது.
காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:திருமானூரில் 621 காளைகளுடன் ஜல்லிக்கட்டு கோலாகலம்