வீடியோ: கருக்காடிப்பட்டியில் வடமாடு பிடிக்கும் ஜல்லிகட்டு போட்டி - vadamadu jallikattu in thanjavur district
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு பிடிக்கும் ஜல்லிகட்டு போட்டியில் 12 காளைகளை பிடிக்க 108 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் ஆலய மாசிமக திருவிழாவை முன்னிட்டு வடமாடு பிடிக்கும் ஜல்லிகட்டு போட்டி இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்த போட்டியை தஞ்சை வருவாய் கோட்டாச்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, உறுதி மொழியினை ஏற்று கொண்ட பிறகே மாடுபிடி வீர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 மாடுபிடி குழுவினர் என மொத்தம் 108 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு காளைக்கும், ஒன்பது வீரர்கள் வீதம் 25 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் குக்கர், அயன்பாக்ஸ், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.