குழந்தைக்கு கொடுக்கவிருந்த மாத்திரையில் இரும்பி கம்பி - அதிர்ந்துபோன பெற்றோர்! - மாத்திரைக்குள் இருந்த இரும்பு கம்பி
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். இவருடைய ஏழு வயது குழந்தைக்கு நேற்று ( ஏப்.04 ) திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், வெலக்கல்நாத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக குழந்தையை அழைத்துச் சென்றார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சல் இருப்பதால் பாராசிட்டமால் மாத்திரையை கொடுத்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக இன்று ( ஏப்.05 ) பெற்றோர்கள் மாத்திரையை உடைத்து, ஏழு வயது சிறுமிக்கு கொடுக்க முற்பட்டபோது அந்த மாத்திரையில் கம்பி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செம்று முற்றுகையிட்டனர். இதனால், மருத்துவமனையில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில் குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், இது குறித்துப் புகாரின் பேரில் செந்தில்குமார் பாராசிட்டாமல் மருந்து பெட்டகத்தில் இருந்து அனைத்து மாத்திரைகளையும் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் அனு அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதையும் படிங்க;கஞ்சா வேட்டையில் சிக்கிய 14.5 கிலோ தங்கம்.. சென்னை வந்த ஆம்னி பேருந்தில் அதிரடி வேட்டை!