"காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து கற்றுக் கொடுத்த பாடம்" - அமைச்சர் கூறுவது என்ன?
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ளா பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் வருகை புரிந்தார்.
அங்கு விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பழங்கள், உணவு பொருட்களை வழங்கிய அமைச்சர், "உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழையுங்கள்" என அலைபேசி எண்ணை கொடுத்தார். அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் விருதுநகரில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விபத்து இல்லாமல் செயல்படுகின்றன. அவர்களை பின்பற்றி மற்ற நிறுவனங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டை விபத்தில்லா மாநிலமாக மாற்ற தமிழக முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.