இந்திய ஹாக்கி அணி வீரர்கள் சென்னை வருகை; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
சென்னை:ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இந்தியா ஹாக்கி அணியின் 31 பேர் கொண்ட குழுவினர் அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் பங்கேற்க இந்தியா ஹாக்கி அணியின் 31 பேர் கொண்ட குழுவினர் அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வீரர்களுக்கு சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர்.
தமிழக பாரம்பரிய முறைப்படி இந்திய ஹாக்கி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஹாக்கி அணி வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தப் பின் சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி வீரர்கள் அனைவரும் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை (29.07.2023) அன்று மலேசியா ஹாக்கி அணியினர் மற்றும் நேற்று (31.07.2023) ஜப்பான் மற்றும் கொரியா ஹாக்கி அணியினர் வந்தனர். மேலும் பாகிஸ்தான் ஹாக்கி அணி மற்றும் சீனா ஹாக்கி அணி வீரர்கள் சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.