"சிறப்பாக விளையாடினால் உலககோப்பை அணியில் இடம் இடைக்கலாம்" - கிரிக்கெட் வீரர் நடராஜன் - கிரிகெட் வீரர் நடராஜன்
கோயம்புத்தூர்:ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் உணவக தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு காயம் காரணமாக விளையாட முடியவில்லை எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நடராஜன், "சையத் முஷ்டாக் அலி டிராபி கோப்பைக்கான போட்டி நடைபெற உள்ளது, அதில் சிறப்பாக விளையாடினால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம், விளையாடுவதை சிறப்பாக விளையாட வேண்டும் மீதி கடவுள் பார்த்துக் கொள்வார்" எனத் தெரிவித்தார்.
மேலும், தற்போது உள்ள இளைஞர்கள் நல்லவிதமாக விளையாடுகிறார்கள் எனவும், இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம் என தெரிவித்த நடராஜன், தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாக கூறினார்.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், சூழ்நிலை காரணமாக இவ்வாறு அவர்கள் உருவாகிறார்கள். தமிழக அரசு இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்று நடராஜன் தெரிவித்தார்.