தேனி எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
தேனி: பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்சி மலைப்பகுதியில் கடந்த 2 மாதங்களாகப் போதிய மழை பெய்யாது போன நிலையில், மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியல் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்த கன மழையின் காரணமாக அருவியில் நீர் வரத்து வரத்துவங்கியுள்ளது. தற்போது நீர் வரத்து அதிகரித்து அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அருவிகளில் மிகவும் உயரமான எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு செல்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்தும், அருவியின் எழில் தோற்றத்துடன் செல்ஃபி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.