ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! - Hogenakkal Cauvery River
தருமபுரி: கர்நாடகா மாநிலத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் காரணமாக தமிழ்நாட்டுன் எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர்வரத்து தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.