போதிய மழை இல்லாததால் வறட்சி.. ஓணம் கொண்டாட முடியாமல் தவிக்கும் பூ விவசாயிகள்! - Onam
தேனி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து உள்ள நிலையில், போதுமான மழை இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் பூக்களின் விளைச்சல் குன்றி, கருகி போவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மஞ்சள் செவ்வந்தி மற்றும் மாட்டுச் செவ்வந்தி என்று அழைக்கப்படும் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை வரத்து இன்றி, கடுமையான வெப்பநிலை நிலவுவதால் பூஞ்செடிகள் கருகி வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, செடியில் பூத்த மஞ்சள், சிகப்பு செவ்வந்திப் பூக்களும் கடுமையான வெப்பநிலை காரணமாக செடியிலேயே கருகி உதிர்ந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால், அதன் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட மஞ்சள் மற்றும் சிகப்பு செவ்வந்தி பூக்கள் தற்போது ரூபாய் நாற்பது முதல் 50 வரை விலை அதிகரித்து கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ஓணம் பண்டிகை வரை பூக்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போதுமான மழை இல்லாமல், கடுமையான வெப்பம் வீசுவதன் காரணமாக பூக்கள் செடியிலேயே கருகி உதிர்ந்து விடுவதால் அரசு தலையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.