ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை! - Cauvery river
தருமபுரி: கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கபினி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடியும் கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை வந்தடைந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 500 கன அடி ஆக உள்ளது. அணைகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை காரணமாக சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரை ஓரப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் அழகை பார்த்து ரசித்து செல்கின்றனர்.