மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை; போடி அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு! - கொட்டக்குடி ஆறு
Published : Jan 7, 2024, 4:19 PM IST
தேனி: போடிநாயக்கனூர் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால் அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (ஜன.06) இரவு முதல் சுமார் 8 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கொட்டகுடி, குரங்கணி, போடிமெட்டு, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் போடியின் முக்கிய நீர்வரத்து பகுதியான அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகளைத் தாண்டி காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்வதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் ஆற்றில் இறங்குவதற்கும் தடுப்பணைகளைத் தாண்டி செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.