பாரம்பரிய சிறுதானிய உணவுகள் சமையல் போட்டி! வித விதமான உணவுகளை செய்து அசத்திய மகளிர்! - வேலூரில் பாரம்பரிய உணவுகள் சமையல் போட்டி
Traditional Food Cooking Competition: வேலூர் மாவட்டம், அரியூரில் ஸ்ரீ நாராயணி பள்ளி வளாகத்தில் டிவைன் கேப் சார்பில், பாரம்பரிய உணவுகள் அதன் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுதானியங்கள் கொண்டு சமையல் போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 பெண்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போட்டிகளை நாராயணி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் வரகு அரிசி பொங்கல், வரகரிசி வெஜிடபிள் ரைஸ், ராகி சிம்லி, சாமை லட்டு, வரகரிசி அல்வா, கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ், நவதானிய பாயாசம், நவதானிய தோசை, குதிரைவாலி அடை, தினை அரிசி வெஜிடெபுள் சாதம், எள்ளு உருண்டை, கொள்ளு துவையல், ரசம், வேர்க்கடலை லட்டு, பச்சை பயிறு பாயசம் உள்ளிட்ட பாரம்பரிய வகையான நூற்றுக்கணக்கான சிறுதானிய உணவுகளை சமைத்து பெண்கள் அசத்தினர்.
இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக சமையல் கலை வல்லுநர் ‘செப் தாமு’ கலந்து கொண்டு சிறுதானியங்களைக் கொண்டு சிறப்பாக சமைக்கப்பட்டு இருந்த உணவுகளை தேர்வு செய்தார். பின்னர் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் சமையல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாராயணி பள்ளி இயக்குநர் சுரேஷ், தொழிலதிபர் ஜெகதீஸ்வர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.