Tasmac: வாணியம்பாடியில் டாஸ்மாக் பார்களுக்கு அதிரடி சீல்!
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் பின்புறமாக அனுமதியின்றி டாஸ்மாக் பார் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்தி விட்டு மதுப் பிரியர்கள் அட்டகாசம் செய்து வருவதாகத் திருப்பத்தூர் மாவட்டம் கலால் உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், கலால் உதவி ஆணையர் பானுமதி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது அங்கு ஆட்கள் யாரும் இல்லை எனினும் அங்கு டாஸ்மாக் பார் இயங்கி வந்ததற்கான ஆதாரமாக அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடப்பதைக் கண்டறிந்து உள்ளனர். ஆகவே டாஸ்மாக் பார் அருகே பூட்டபட்டு இருந்த அறைக்குச் சீல் வைத்தனர். பின், டாஸ்மாக் கடை என பெயர் அச்சடிக்கப்பட்ட பேனர்களைக் கிழித்து எறிந்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் ஆம்பூர் பைபாஸ் சாலையில் இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் ஆய்வு செய்து உள்ளனர். அப்போது அரசு மதுபான கடையின் பின்புறம் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பார் அறைக்கு நகர காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:சேலத்தில் தியேட்டரில் காலாவதியான உணவுகள் விற்பனை; அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்!