விடுமுறை எதிரொலி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி சாமி தரிசனம்! - நீண்ட பக்தர்கள் காத்திருந்த வரிசையில்
தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போன்று திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட கூடுதலாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே குவிந்து உள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் கடலில் உற்சாகமாக புனித நீராடியும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடியும் வந்தனர்.
மேலும் நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 04:30 மணிக்கு விஸ்வரூப தீப ஆராதனையும், 05:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற பூஜைகளும் வழக்கம் போல் நடைபெற்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக கோவை, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருக்கக் கூடிய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயிலில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லக்கூடிய கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி, முதியவர்கள் செல்லும் வழி என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட கூடிய நிலையில் ஆறு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ஶ்ரீரங்கம் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்