துப்பாக்கி ஏந்தி இருசக்கர வாகனத்தில் ரோந்து.. மாஸ் காட்டிய துரைப்பாக்கம் போலீஸ்! - patrol on two wheelers with guns
Published : Oct 16, 2023, 11:08 PM IST
சென்னை: துரைப்பாக்கம் போலீசார் சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் போலீசார் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பெருங்குடி கல்லுக்குட்டை, சீவாரம், பெருங்குடி, துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை, கெனால் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில், குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதுடன், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபர்களை பிடித்து விசாரணையும் மேற்கொண்டனர்.