சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்தது; நூலிழையில் உயிர் தப்பிய முதியவர் - சட்டைப் பையில் இருந்த போன் திடீரென வெடித்தது
திருச்சூர் (கேரளா): திருச்சூர் அருகே மரோட்டிச்சல் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் (70). இவர் நேற்று காலை 10 மணி அளவில் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அதிர்ச்சி அடைந்த இலியாஸ் சுதாரிப்பதற்குள் வெடித்த செல்போன் மளமளவென தீப்பற்றி எரியத் துவங்கியது.
உடனடியாக இலியாஸ் அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை தரையில் எடுத்து போட்டார். இதற்கிடையே சட்டையில் தீப்பிடித்தது. இலியாஸ் உடனடியாக சட்டையில் பற்றிய தீயை கைகளால் தட்டி அணைத்தார். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இலியாஸ் காயமின்றி உயிர் தப்பினார்.
இலியாஸ் வெடித்து சிதறிய செல்போனை திருச்சூர் போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள கடையில் ஓராண்டுக்கு முன் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஸ்மார்ட் போன்கள் வெடிக்கும் சம்பவங்கள், அதிகரித்து வரும் நிலையில் தற்போது சாதாரண கீபேட் மாடல் செல்போன் வெடித்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அந்த ஹோட்டலில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. தற்போது முதியவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து தீப் பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.