வரும் மே 26 முதல் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி - கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா
திண்டுக்கல்: கொடைக்கானலில் சீசன் ஆரம்பித்து உள்ளதைத் தொடர்ந்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சியுடன் கோடை விழாவும் நடைபெறும். இதற்காக தோட்டக் கலைத்துறை சார்பில், பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்த வருடம், மே மாதம் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் பிரையண்ட் பூங்காவில் 60ஆவது மலர் கண்காட்சி மே 26ஆம் தேதி துவங்கி ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விழாவும் 8 நாட்கள் நடைபெறும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்து உள்ளார்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இங்கு நடைபெறும் மலர் கண்காட்சி துவக்க விழாவில் ஊரக வளர்ச்சித்துறை துறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.