கோவையில் சட்டவிரோத செங்கல் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்! - பேரூர் தாலுகா செங்கல் சூளைகள்
கோவை: கோவை மாவட்டம் தடாகம் தொண்டாமுத்தூர்,பெரியநாயக்கன்பாளையம், பேரூர், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகச் செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.மேலும் இதன் கனிம வளங்கள் அதிகமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன என இரண்டு வருடங்களுக்கு முன்பு தடாகம் பள்ளத்தாக்கு மீட்பு குழு உட்பட சமூக ஆர்வலர்களால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 2021ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்தையொட்டி கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டன.அதனைத் தொடர்ந்து செங்கல் சூளைகளுக்குச் சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீதமுள்ள மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளுக்குச் சீல் வைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.அதன்படி மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பேரூர் வட்டத்திற்கு உட்பட்ட 21 செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.பேரூர் வட்டாட்சியர் காந்திமதி தலைமையில் பேரூர் காவல்துறையின் பாதுகாப்புடன் செங்கல் சூளைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இனிவரும் நாட்களில் அனைத்து தாலுகாவிலும் நீதிமன்றம் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகளுக்கும் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Varahi Amman: தேனியில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்!