Covai-ல் காது கேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் விசில் ஊதி ஆர்ப்பாட்டம்
கோவை:தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின்(TARATDAC) சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் "அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் சைகை மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் காது கேளாத, வாய்ப்பேசாத மாற்றுத்திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், அரசுப் பணிகளில் ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் தங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் குடும்பங்களைச் சார்ந்த அனைத்து குடும்ப அட்டைகளையும் பிஎச்எச் குடும்ப அட்டையாக மாற்றித் தர வேண்டும், அரசு இலவச வீட்டு மனையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விசில் ஊதி, கோரிக்கை பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.