Illegal sale of drugs: சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை! போலீசார் அதிரடி வேட்டை
ஈரோடுமாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளம் பெண்கள் உட்பட நால்வரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோட்டை பத்ரகாளி அம்மன் பகுதிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக ஈரோடு நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நின்று கொண்டிருந்த சந்தியா, சமீம் பானு என்ற இரு இளம் பெண்களையும், சேகர் ராஜா மற்றும் பசுபதி என்ற இரு இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சட்ட விரோதமாக, போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 49 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் இரண்டு ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய வாலிபர் டார்ஜன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சமீம்பானு மற்றும் பசுபதி ஆகியோர் ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தியது மற்றும் போதை மாத்திரைகளை விற்ற வழக்கில் சிறைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.