CCTV: இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதி கணவன், மனைவி பலி
கோயம்புத்தூர்:சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூர் செல்லும் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விபத்துகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சாலையின் நடுவே தடுப்புச் சுவர் இல்லாமல், ஒரு வழிப்பாதையாக இருப்பதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பூரைச் சார்ந்த ஜெகநாதன் என்பவரும் அவரது மனைவி பாக்யலட்சுமியும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வாளையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் அருகே வரும் பொழுது வலது புறமாக திரும்பியபோது பின்புறமாக வந்த லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் பைக்கில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடனடியாக இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியினையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.