பாளையங்கோட்டை சாலையில் திடீர் பள்ளம்.. 4 நாட்களாகியும் சரி செய்யப்படாததாக குற்றச்சாட்டு! - huge pothole
Published : Jan 2, 2024, 4:54 PM IST
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிச.16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், தங்களது மக்கள் உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
அதேபோல், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்தது. மேலும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் முழுவதும் சாலைகள், பாலங்கள் போன்றவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில், திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பாதாளச் சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அரிப்பு காரணமாகவும், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நான்கு நாட்களைக் கடந்தும் இன்னும் மிகப்பெரிய அளவிலான பள்ளம் சரி செய்யப்படாமல், தடுப்புகள் மட்டும் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த மெத்தனப்போக்கால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைதுள்ளனர். மேலும், உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.