தமிழ்நாடு

tamil nadu

மாணவி ரியாஸ்

ETV Bharat / videos

'IASஆவதே கனவு' 470 மதிப்பெண்கள்..பள்ளியிலேயே முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி ரியாஸ்ரீ! - பள்ளியிலேயே முதலிடம் பிடித்த

By

Published : May 22, 2023, 8:22 PM IST

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த டிரெண்ட் சிட்டி பகுதியில் வசித்து வருபவர், அகிலன்-சுமதி தம்பதி. இவர்களின் ஒரே மகள் ரியா ஸ்ரீ(15). பிறவியிலேயே கண்பார்வையற்ற இவர், ஓசூர் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன், பள்ளி முதலிடம் பெற்றும் அசத்தியுள்ளார். 

பிரெய்லி மொழியில் தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் கற்றார். பின்னர், 8ஆம் வகுப்பு வரை ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள பள்ளியில் பயின்றார். இதனையடுத்து, 9 மற்றும் 10ஆம் வகுப்பை ஓசூர் அடுத்த நல்லூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மற்ற மாணவர்கள் பயிலக்கூடிய பாடமுறை என்றபோதும், தன்னம்பிக்கையுடன் தனது தாயரின் துணையுடன் படித்து வந்தார். இந்த நிலையில், மற்ற மாணவர்கள் பயிலக்கூடிய பாடமுறை என்றாலும் ரியா ஸ்ரீ, அவர்களுக்காகவே மாணவியின் தாய் சுமதி சென்னையிலிருந்து பிரெய்லி மொழி புத்தகங்களை ஆர்டர் செய்து வரவழைத்து தான், ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்றுள்ளார். 

கண் பார்வைக்காக எத்தனையோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னும், மாணவிக்குப் பார்வை கிடைக்காத நிலையில், மாணவியுடன் அவரது தாயார் சுமதியும் பள்ளிக்குச் சென்று மாணவி ரியா ஸ்ரீ-க்கு வேண்டிய பிற உதவிகளையும் செய்து வந்துள்ளார். இங்கு திறமைக்கும் எதுவும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார், மாணவி ரியா ஸ்ரீ. 

அத்தோடு பள்ளியிலேயே அதிக மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்று மாணவி ரியா ஸ்ரீ, மற்றுமொரு சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், ஓசூர் சார் ஆட்சியரகத்தில் துணை ஆட்சியர் சரண்யாவைச் சந்தித்து மாணவி ரியாஸ்ரீ வாழ்த்துப் பெற்றார். அப்போது தலைமையாசிரியர் மாணவி நன்றாகப் பாடுவதாகக் கூறியதையடுத்து, இனிமையான குரலில் 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்ற பாடலைப் பாடி அனைவரையும் ரசிக்க வைத்தார். 

அப்போது பேசிய மாணவி ரியா ஸ்ரீ, நல்லூர் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்ததாகவும், படிக்கும் போது ஆசிரியர்களும் நண்பர்களும் என அனைவரும் நன்றாக ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தனக்கு வீட்டுப்பாடங்கள் குறித்து நண்பர்களும் பாடங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியர்களும் விளக்குவதாகவும், தேர்வில் கேள்விகளுக்கு எப்படி குறித்த நேரத்தில் விடையளிப்பது என அறிவுறுத்திய தமிழ் ஆசிரியரான மாதேஸ்வரனுக்கு நன்றி என்றார். ஆசிரியர் ரேகா எப்போது சந்தேகம் எனக் கேட்டாலும் அதை தெளிவுபடுத்தியதாகவும், பள்ளியின் தலைமையாசிரியர் தன்னை ஐஏஎஸ் ஆக வேண்டும் என ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார். 

பாடப் புத்தகங்களை சென்னை சென்று பிரெய்லி முறையில் புத்தகங்களாக பிரிண்ட் செய்து தந்ததால் தான், இந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 470 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது என்றார். மேலும், தனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என ஆசையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 'தடைகளும் குறைகளும் எனது தன்னம்பிக்கைக்கு முன் ஒன்றுமில்லை; மனம் நினைத்தால் மட்டும்போது எதையும் சாதிப்பேன்' என அசாத்தியமான திறமையோடு சாதித்த இந்த மாணவி ரியா ஸ்ரீ-யை வாழ்த்துவதில் ஈடிவி பாரத் தமிழ்நாடு பெருமையடைகிறது. அத்தோடு, ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற அவரது கனவு நனவாகவும் வாழ்த்துகிறது.

இது குறித்து மாணவியின் தாய் சுமதி கூறுகையில், 'கண் பார்வையில்லாமல் கிராமப்புறங்களில் இருந்து படிக்க வரும் மாணவ மாணவியர்களுக்கு, வேண்டிய பிரெய்லி மொழியில் கல்வி கற்பதற்கான பயிற்சிகளோ, ஆசிரியர்களோ இல்லை என்ற நிலைமை உள்ளது. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உள்ள பிரெய்லி முறையை உரிய பயிற்சியுடன் கற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், கண் பார்வையற்ற மாணவியாக இருந்த போதிலும், கடின உழைப்பாலும் விடாத முயற்சியாலும் படித்து 10ஆம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ரியா ஸ்ரீ-க்கு கண் பார்வையை பெறுவதற்கு வேண்டிய அதிநவீன உயர் சிகிச்சை வழங்கிட வேண்டும் என அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details