ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! - நீர்வரத்து 7ஆயிரம் கன அடி
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் நேற்று மாலை (ஜூலை 25) தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு 2,500 கன அடியாக வந்தது. படிப்படியாக நீர்வரத்து உயர்ந்து நேற்று மாலை 4,000 கன அடி ஆக இருந்தது. இன்று காலை (ஜூலை 26) 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.