வேகமாக வறண்டு வரும் ஒகேனக்கல் காவிரி ஆறு... முரண்டு பிடிக்கும் கர்நாடகா அரசு - வேகமாக வறண்டு வரும் ஒகேனக்கல் காவிரி ஆறு
தருமபுரி:தமிழகத்தில் முக்கியமான அருவிகளில் ஒகேனக்கல் அருவி சிறந்த பங்காற்றி வருகிறது. இந்த அருவி தமிழகத்தின் முன்னணி சுற்றுலா தளமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படும், ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், குடகு பகுதியில் உருவாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் பிலிகுண்டலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழி காவிரி ஆறு மார்க்கமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை சென்று அடைகிறது. மேட்டூர் அணையில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயப் பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்பட்டு வருகிறது.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும். கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், பிலிகுண்டுலு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்று அடையும். இந்த ஆண்டு பருவ மழைத் தொடங்காத காரணத்தால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 700 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி முழுவதும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. கர்நாடக அரசு தற்போது காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தெரிவித்து வருகிறார்.
தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்றால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களின் குடிநீர் தேவை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகப் பருவ மழையின் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்டப் பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது. சென்றாண்டு ஜூலை 15ஆம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.