பராமரிப்பின்றி கிடக்கும் சாலை மின்விளக்குகள் - விபத்துக்கு வழிவகுக்கிறதா நகராட்சி? - police
ஈரோடு:புஞ்சைபுளியம்பட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி ஒன்று அமைந்து உள்ளது. இது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே, பல லட்ச ரூபாய் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் நான்கு திசைகளிலும் ஒளிரும் வகையில் பொருத்தப்பட்ட ஆறு மின் விளக்குகளால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் உயர் கோபுர மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி போனதால், கடந்த 2 ஆண்டுகளாக உயர் கோபுர மின்விளக்கு செயலிழந்து கிடக்கின்றன. இதன்காரணமாக, மின் விளக்குகள் கம்பத்தில் இறக்கி நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரங்களில் முக்கிய சந்திப்பு பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகளும், திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
நால்ரோடு போலீசார் சோதனைச்சாவடி அருகே உயர் கோபுர மின்விளக்குகளுக்காக பொருத்தப்பட்ட இரும்பு தளவாடங்களும் விழுந்து வீணாகி வருகின்றன. தற்போது முக்கிய சாலைச் சந்திப்பு பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்கை எரிய வைத்து விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.