குன்னூர் தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பரபரப்பு..! - வனத்துறையினர்
Published : Jan 11, 2024, 6:45 PM IST
நீலகிரி:குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான், கருஞ்சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
அவ்வாறு கடந்த வாரம் சமவெளிப் பகுதியில் இருந்து பர்லியார் வழியாக வந்த யானைக் கூட்டம் குன்னூர் அருகே நான் சர்ச் பகுதியில் உள்ள பள்ளிக்கூட உணவு அறை, பள்ளியின் வகுப்புகள், வெளிப்புற நுழைவாயில் மற்றும் காம்பவுண்ட் சுவர்களைச் சேதப்படுத்திச் சென்றன. இதையடுத்து, இந்த யானைக் கூட்டம் தற்போது குன்னூர் அருகே உள்ள கிளென்டேல் தனியார் தேயிலை எஸ்டேட் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வனத்துறை ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.