நெல்லை சம்பவம் இன்னொரு சாத்தான்குளம் - ஹென்றி திபேன் ஆவேசம்! - ஹென்றி திபேன்
மதுரை:நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் பல் பிடுங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், விவகாரம் தொடர்பாக காவல் துறை சித்திரவதைக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த கூட்டமைப்பினர் பல்வேறு ஆய்வுகளை சம்பவம் நடைபெற்ற இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முதற்கட்ட அறிக்கையை தயார் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையை விட அம்பாசமுத்திரத்தில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் நடந்துள்ளதாக, காவல் துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று ( ஏப்.05 ) பாதிக்கப்பட்டவரை அழைத்து வந்த ஹென்றி திபேன் செய்தியாளர் சந்திப்பில் பேசவைத்தார். அப்போது பேசிய ஹென்றி திபேன், “நெல்லை காவல் துறையின் மனித உரிமை மீறல் சம்பவம் இன்னொரு சாத்தான்குளத்தையே நினைவுபடுத்துகிறது. இது போன்ற தொடர் சம்பவங்கள் உயர் காவல் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் முதலமைச்சர் இருக்கிறார் அல்லது தமிழக உள்துறை அவரது கண்காணிப்பில் இல்லை என்பது தான் இதன் பொருளாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்: போலீசார் கூண்டோடு மாற்றம்!