தலைக்கவசம் உயிர்க் கவசம்! வாகனஓட்டிகள் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி!
திருப்பத்தூர்: இருசக்கர வாகன விபத்துகள் பல இடங்களில்தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில் தலைக் கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியில் இரு சக்கர பழுது பார்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இப்பேரணியை காவல் ஆய்வாளர் சிவானி துவங்கி வைத்தார். திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் துவங்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.
விழிப்புணர்வு பேரணி தொடங்கும் முன் காவல் ஆய்வாளர் சிவானி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தலைக்கவசம் , இருசக்கர வாகனங்களின் ஆவணங்களின் முக்கியத்துவம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனால் வரும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் இரு சக்கர பழுது பார்ப்போர் சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் காவல் துறை அதிகாரிகளும் தலைக்கவசம் அணிந்து அதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முறையில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியில் திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் தலைவர் மணவாளன், துணை தலைவர் குபேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.