நெல்லையில் கனமழை; குளம்போல் மாறிய அரசு அலுவலகம்! - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருநெல்வேலி:தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனாலும் ஒருசில இடங்களில் அவ்வப்போதுமழை பெய்து, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சற்று விடுதலை கொடுக்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் சுழற்சி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் இன்று (ஏப்ரல் 26) பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. பாளை, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பால்வளத்துறை துணைப்பதிவாளர் அலுவலகம் முன், குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது.
மேலும் அந்த அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் ஒன்றரை அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், கணினி மற்றும் ஆவணங்கள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்தன. அருகே புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அலுவலகத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனர்.