நீலகிரியில் கனமழையால் சாலையில் மண் சரிவு.. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே போக்குவரத்து பாதிப்பு! - நீலகிரியில் கனமழை
Published : Nov 23, 2023, 2:18 PM IST
நீலகிரி: தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், மரங்களும் சாலையில் சாய்ந்து விழுந்து இருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதில் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், 13வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் மரம் சாய்ந்து விழுந்தது. மேலும், மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும் சாலையில் விழுந்தது.
இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அதிகாலையில் இருந்தே வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சாலை சீரமைப்புப் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.