நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை..! பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! - நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை
Published : Nov 3, 2023, 2:33 PM IST
ஈரோடு:பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
மேலும் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு நீர்வரத்து 533 கனஅடியாக இருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று நீர் வரத்து 3,694 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 64.47 அடியாகவும், நீர் இருப்பு 8.7 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1,750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.