கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை, பெருவெள்ளம்.. வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு! - கேரளா மழை
திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன.
இடுக்கி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தொடர் கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கன்மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொட்டித் தீர்த்த கனமழையால், சேதமடைந்த வீடு குளத்திற்குள் விழுந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 50 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் நிலச்சரிவு, மண்சரிவு, மலை வெள்ளம், நீர் தேங்கல் போன்றவை ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கன்மழையால் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடல் சீற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெரியார் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.