குன்னூரில் "ஹேப்பி ஸ்ட்ரீட்" கோலாகல கொண்டாட்டம்! - happy street
நீலகிரி:குன்னூரில் "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் பிரபாகர் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் காவல்துறை சார்பாக முதன்முதலாக குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் உதகையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என உற்சாகமாக நடனங்கள் ஆடியும் பாடல்கள் பாடியும், கொண்டாடினர். மேலும், பரத நாட்டியம், கராத்தே, சிலம்பம், ஹாக்கி, சதுரங்க போட்டி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில், குழந்தைகள் பல மாறுவேடங்களில் நடித்து பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
இதனைப் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர். மேலும், 90களில் மக்கள் விரும்பி உண்ணும் தின்பண்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சிலம்பாட்டம், வால் வீச்சு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் செய்து காட்டினர். இதில் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதி, அரசு மருத்துவமனையின் பிரதான சாலையாக உள்ளதால் வருங்காலங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்துவதற்கு மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் சாலைகளில் நடத்தக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.