தேனியில் 62-வது ஆண்டாக 108 வடைமாலையுடன் அனுமன் ஜெயந்தி விழா!
Published : Jan 11, 2024, 12:57 PM IST
தேனி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தேனியில் உள்ள ஸ்ரீமத் ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை தரிசித்துச் சென்றனர்.
தேனி அல்லிநகர பகுதியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஸ்ரீமத் ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் இன்று 62வது ஆண்டாக அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, மூலவரான ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலை சாற்றப்பட்டது.
இதன் பின்னர், பலவிதமான நறுமண மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டடு, கையில் கடாயுதம் ஏந்தியவாறு அமர்ந்திருக்கும் உற்சவர் ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.