மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி வழிபாடு! - குருபெயர்ச்சி
மயிலாடுதுறை: நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சரியாக 11.24 மணிக்கு இடம் பெயர்ந்தார்.
தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும். அந்த வகையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குரு அனுக்கிரகத் தலமான வதான்யேஸ்வரர் கோயிலில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. பஞ்சமுக அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.