குரு பெயர்ச்சி 2023: குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்! - Kumbakonam
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருப்பிறம்பியம் சாட்சிநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். மேலும் இக்கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். ராஜகோபுரம் அருகே குரு பகவான் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். இது இக்கோயிலின் சிறப்பு ஆகும்.
மேலும் இங்கு சனகாதி முனிவர்களுக்கு 4 வேதங்களை உபதேசிக்கும் அற்புத மூர்த்தியாக தெட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில், நேற்று இரவு 11.27 மணிக்கு குருபகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
பிறகு விசேஷ பூஜைகள் செய்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்குருபெயர்ச்சியினை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகார்கள் குருபகவானுக்கு பரிகார அர்ச்சனைகள் செய்து வழிபடுவது நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.