குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்! - திருவண்ணாமலை
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், 'நினைத்தாலே முக்தி' அளிக்கும் தலமாகவும் விளங்கக்கூடியது, திருவண்ணாமலையில் அமைந்து உள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.ஆர்.பாட்டீல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக இவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் தரிசனம் செய்து விட்டு அவர் இன்று காலை திருவண்ணாமலை வந்ததாக கூறப்படுகிறது. திவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள கலைக் கல்லூரி ஒன்றில் குஜராத் மாநில பாஜக தலைவர் பாட்டீல் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியம் வரவேற்றார்.
பின்னர் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்ற பாட்டீல் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து கோயிலை வலம் வந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் அண்ணாமலையார் கோயில் சார்பாக பாட்டிலுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.