வால்பாறை அருகே குடியிருப்பை துவம்சம் செய்த யானைக் கூட்டம்.. அச்சத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்! - வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அச்சம்
Published : Nov 1, 2023, 7:17 PM IST
கோயம்புத்தூர்:வால்பாறையை ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பிபிடிசிக்கு (BBTC) சொந்தமான முக்கோட்முடி எஸ்டேட் அருகே, தேயிலைத் தோட்ட தொழிலாளி கமலம் என்பவரது வீட்டை யானைகளின் கூட்டம் நள்ளிரவு சமயத்தில் உடைத்து, அங்குள்ள பொருட்களை துவம்சம் செய்துள்ளது.
அதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள், சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். நல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியூருக்குச் சென்று இருந்ததால், உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.
இருப்பினும் கடந்த சில தினங்களாக யானைகளின் கூட்டம் அப்பகுதி அருகே முகாமிட்டு இருப்பதால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவும் வேளையிலும், குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் குறித்து அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.