கூட்டுக் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; 20 பேர் படுகாயம்
தஞ்சாவூர்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை நோக்கி வந்து கொண்டு இருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரத்தூர் வழியாக ஆற்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் பள்ளம் தோண்டப்பட்டிருந்த பகுதியில் மழையின் காரணமாக மணல் உள்வாங்கி இருந்துள்ளது. இதனை அறியாத அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் டிரைவர், அதன்மீது பேருந்தை செலுத்தியதால் பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கி மெதுவாக சாய தொடங்கியது.
இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளனர். இதனிடையே பேருந்து முழுமையாக சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.