கோபியில் இரண்டு அரசுப் பேருந்துகள் ஜப்தி.. சாலை விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிமன்றம் நடவடிக்கை! - அரசு போக்குவரத்து கழகம்
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 2008ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியின் மீதி அரசுப்பேருந்து மோதிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈடு வழங்காததால் இரண்டு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள லக்கடிப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர்கள், ராமஜெயம் - நீலாம்பிகை தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு கோபி - சத்தியமங்கலம் சாலையில் பள்ளத்துதோட்டம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து மோதி இருவரும் விபத்துக்குள்ளாகிய நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இது சம்பந்தமாக கோபி, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட ராமஜெயத்திற்கு ரூ. 45,250 மற்றும் மனைவி நீலாம்பிகைக்கு நஷ்ட ஈடாக ரூ. 89,220 வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசுப் போக்குவரத்து கழகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டு நிறைவேற்றுமனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகம், நஷ்ட ஈடு வழங்காத நிலையில் கடந்த ஜூலை 6ம் தேதி அன்று இரண்டு அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 31) கோபி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த இரண்டு அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றதிற்கு கொண்டு சென்றனர்.