கோவையில் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
Published : Jan 18, 2024, 1:46 PM IST
கோயம்புத்தூர்:வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து, நேற்று அரசுப் பேருந்து ஒன்று வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. வால்பாறை டவுன் பகுதிக்கு வந்த இந்த பேருந்து, பயணிகளை இறக்கி விட்ட பின் மீண்டும் புறப்பட்டபோது, பிரேக் பிடிக்காததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த கொடிக்கம்பங்கள் மற்றும் முன்பக்கம் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோதி சாலையில் ஓடியது. அப்போது வால்பாறையில் இருந்து கோவைக்குச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்து மீது இந்தப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இரு ஓட்டுநர்கள் உள்பட 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பின்னர், காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்த வெள்ளைச்சாமி, அன்சாரி, முத்துப்பாண்டி, கற்பகவள்ளி, விஜய்பால்வீன், தெப்பம்மாள் உள்ளிட்டோர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், சிலருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர். இவ்வாறு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.